தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 487 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-05-13 04:10 GMT   |   Update On 2022-05-13 04:10 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 107 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரத்து 487 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனகக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 8 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது . இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். மேலும் படகில் குடும்பத்துடன் சவாரியும் சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 107 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரத்து 487 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 107.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 107.55 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி 100 அடியை எட்டியது. தொடர்ந்து 201-வது நாளாக இன்றும் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் வழக்கம் போல ஜுன் 12ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News