தமிழ்நாடு
ராமதாஸ்

சார்பதிவாளர் நியமனத்தில் இட ஒதுக்கீடு: தடைகள் அகற்றப்பட்டும் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த தாமதம் ஏன்?- ராமதாஸ் கேள்வி

Published On 2022-05-11 10:23 GMT   |   Update On 2022-05-11 10:23 GMT
2018ம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் நிலை சார்பதிவாளர் பட்டியலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும் போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. அதன்பின் இரு மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அரசின் பதிவுத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.

2018ம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் நிலை சார்பதிவாளர் பட்டியலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பதிவுத்துறை தலைவர் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் அந்தப் பட்டியலை வெளியிட முடியும். ஆனால், தீர்ப்பு வெளியாகி 70 நாட்களுக்கு மேலாகியும் அப்பட்டியலை வெளியிடாமல் பதிவுத்துறை தலைவர் தாமதித்து வருகிறார். இது தி.மு.க. அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரான செயலாகும். இத்தகைய போக்கை மாற்றி எம்.பி.சி பணியாளர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது.

அதை நிறைவேற்றும் வகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சார்பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News