தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் முக்கிய பிரச்சினைகளை புறக்கணித்த கண்காணிப்பு குழுவினர்- தமிழக விவசாயிகள் அதிருப்தி

Update: 2022-05-10 05:34 GMT
தேக்கடி படகு குழாமில் இருந்து தமிழக, கேரள படகுகளில் இவர்கள் முல்லைப்பெரியாறு அணைக்குச் சென்றனர். இவர்கள் பிரதான அணைப்பகுதி, கேலரி பகுதியில் கசிவு நீர், பேபி அணை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்தக்குழுவின் தலைவராக மத்திய நீர் வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார்.

தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜோஸ் ஆகியோர் உள்ளனர். இந்த சூழலில் கண்காணிப்புக் குழுவின் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் கூடுதலாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் சுப்பிரமணியம், கேரள சார்பில் அம்மாநில நீர் பாசனத்துறை நிர்வாகத் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்க்கீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

மூவர் குழுவில் மேலும் இருவர் சேர்க்கப்பட்டு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக இந்தக்குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்தனர்.

தேக்கடி படகு குழாமில் இருந்து தமிழக, கேரள படகுகளில் இவர்கள் முல்லைப்பெரியாறு அணைக்குச் சென்றனர். இவர்கள் பிரதான அணைப்பகுதி, கேலரி பகுதியில் கசிவு நீர், பேபி அணை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் மதகுகளின் இயக்கத்தையும் சரிபார்த்தனர்.

அதன் பின்னர் தேக்கடியில் வழக்கமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. இதில் பேபி அணையில் இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுதல், வல்லக்கடவு பாதையை சீரமைத்தல், தமிழக படகை சுற்றுலா பயணிகளுக்காக இயக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் முன் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஆய்வு மட்டும் செய்து விட்டு இக்குழுவினர் சென்று விட்டனர்.

பல ஆண்டுகளாக தொடரும் தமிழகம் சார்ந்த பிரச்சினைகளை ஆலோசிக்க முடியவில்லை என்பதால் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் இது வரை நடைபெற்ற மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வுகளில் அணைப்பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று தமிழக, கேரள செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசின் தன்னிச்சையான நீர் திறப்பு, அணைப்பகுதியில் கேரள அதிகாரிகளின் அத்து மீறிய ஆய்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தாமலும், செய்தியாளர்களை சந்திக்காமலும் கண்காணிப்புக்குழுவினர் சென்றது தமிழக உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News