தமிழ்நாடு
பூண்டி ஏரி

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது

Published On 2022-05-09 08:08 GMT   |   Update On 2022-05-09 08:08 GMT
பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கோடை வெயில் காரணமாக இந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதினர். அதனை ஏற்று கடந்த 5ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது அதன்பின்னர் தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை 11 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணா தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

இந்தத் தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று இரவு 7.40 மணிக்கு பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. வினாடிக்கு 293 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.80 அடி ஆக பதிவாகியது. 1.282 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News