தமிழ்நாடு
மின்சாரம் தாக்குதல்

கோவில் விழாக்களில் தொடரும் உயிர் பலி- ஒட்டன்சத்திரம் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் மரணம்

Published On 2022-05-04 06:50 GMT   |   Update On 2022-05-04 06:50 GMT
ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுபவம் இல்லாத மாணவரை மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது18). பள்ளி மாணவரான இவர் பகுதி நேரமாக அங்குள்ள மைக்செட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாகணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று இரவு அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் கிருஷ்ணகுமார் ஈடுபட்டு வந்தார்.

அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் அவரது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுபவம் இல்லாத மாணவரை மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா தளர்வுகளுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கோவில் விழாக்கள் தடையின்றி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு கோவில் திருவிழாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தபோதும் தற்போது ஒட்டன்சத்திரத்தில் நடந்த கோவில் திருவிழாவில் மேலும் ஒரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News