தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வம்

சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2022-04-26 05:26 GMT   |   Update On 2022-04-26 05:26 GMT
விக்னேசின் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரசைவாக்கம், கெல்லீஸ் அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை மடக்கி உள்ளனர்.

அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக தெரிவித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதன்பின் ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்திவந்த ஏழை இளைஞன் விக்னேஷ் மறுநாள் வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்னேசின் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, முதல்-அமைச்சர், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை, அதாவது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News