தமிழ்நாடு
பா.வளர்மதி

அ.தி.மு.க.வில் சசிகலா குறித்து பேசுவதற்கு வழியில்லை- முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேட்டி

Published On 2022-04-25 07:46 GMT   |   Update On 2022-04-25 07:46 GMT
எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார்.
மதுரை:

மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆளும் கட்சியை போல மிக வேகமாக சுறுசுறுப்பாக ஜனநாயக முறைப்படி அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. அமைப்புத் தேர்தல் அனைத்து இடங்களிலும் தலைமை கழக அறிவிப்பின்படி நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

பெறப்பட்ட விருப்ப மனுக்களில் ஒருங்கிணைப்பாளர்கள் இறுதியாக யாருக்கு என்ன பதவி என்பதை முடிவு செய்வார்கள். 11 மாத தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்தி வேறு பெயரை சூட்டி இவர்கள் தங்களுடைய செல்வாக்கை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தி.மு.க.வினர் புதிதாக எந்த ஒரு சாதனையையும் கொண்டு வரவில்லை.

சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது. வெட்ட வெளிச்சமாக அ.தி.மு.க.வுக்கு யார் பொறுப்பானவர்கள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளைகளை எல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு மூலம் வழங்கி இருக்கிறது.

எனவே அவர் (சசிகலா) குறித்து பேசுவதற்கு வழியில்லை. எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது. வேறு எங்கும் அ.தி.மு.க. செல்லவில்லை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். பொதுமக்களை பாதிக்கின்ற எந்த ஒரு வி‌ஷயமாக இருந்தாலும் அதற்காக நிச்சயம் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News