தமிழ்நாடு
விமான சேவை

கோவை-கொழும்பு விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைப்பு

Published On 2022-04-25 06:31 GMT   |   Update On 2022-04-25 06:31 GMT
இலங்கையில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கோவை-கொழும்பு விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை:

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வளைகுடா நாடான ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்பு ஆகிய 3 வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் கோவை- ஷார்ஜா மற்றும் கோவை-சிங்கப்பூர் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.

கோவை-இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை இந்த மாதம் மீண்டும் தொடங்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக அக்டோபர் மாதத்திற்கு விமான சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இருந்தபோதும் இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கோவை-இலங்கை இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை இந்த மாதத்தில் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்பது அன்றைய சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News