தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்ற காட்சி.

நத்தம் அருகே சங்கரன்பாறை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2022-04-22 06:13 GMT   |   Update On 2022-04-22 06:13 GMT
திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கொசவபட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சொறிப்பாறைபட்டி மாரியம்மன், சங்கரன்பாறை பாலமுருகன் கோவில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கொசவபட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்டனர். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், தலைமை மருத்துவர் தலைமையில் மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து பங்கேற்க செய்தனர்.

இதேபோல காளைகளை கால்நடைத்துறை இணை இயக்குனர் முருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதியுள்ள காளைகளை போட்டிக்கு அனுப்பினர்.

ஜல்லிக்கட்டு போட்டி 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் பங்கேற்றனர்.

வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்தது. ஆக்ரோ‌ஷமாக வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். துள்ளிக்குதித்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் சில காளைகள் திமிறி எழுந்து யாருடைய கைகளிலும் சிக்காமல் சிட்டாய் சீறிப்பாய்ந்து சென்றது. இதனை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், கடிகாரம், குக்கர், டேபிள் பேன், வெள்ளி பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் மருந்து மற்றும் உபகரணங்களுடன் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

Tags:    

Similar News