தமிழ்நாடு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொலை தூர கிராமங்களுக்கான புதிய மருத்துவசேவை திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்- மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-04-06 12:17 GMT   |   Update On 2022-04-06 12:17 GMT
தமிழகத்தில் நாளை மறுநாள் தொலைதூர கிராமங்களுக்கும், மருத்துவ சேவை அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுந்து பேசினார்.

அப்போது மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட வேடந்தாங்கல் கிராமத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் புதிய சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்திற்கு 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அப்போது உறுப்பினர் தொகுதிக்கு உட்பட்ட அவர் கூறும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய சாத்தியக்கூறு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நாளை மறுநாள் தொலைதூர கிராமங்களுக்கும், மருத்துவ சேவை அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த மருத்துவ சேவை மூலம் 389 வாகனங்களில் டாக்டர், நர்சு, மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் பயணம் செய்வார்கள். அனைத்து ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு எனது தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை பகுதியான கூத்தங்குழியிலும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றை ஏற்படுத்த ஆவண செய்யுங்கள் என்றார்.
Tags:    

Similar News