தமிழ்நாடு
ரெயில்

நெல்லையில் இருந்து சென்னைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

Published On 2022-03-31 04:39 GMT   |   Update On 2022-03-31 04:39 GMT
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட வரும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீ.கே.புதூர்:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ரெயில் வருகிற 13-ந் தேதி தாம்பரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக வருகிற 17-ந்தேதி நாகர்கோவிலில் இருந்தும் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன் பதிவு தொடங்கி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டது.

தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாள் சென்னையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் ரெயில்களான பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் முறையே 225, 175, 125 என காத்திருப்போர் பட்டியலை கொண்டுள்ளது.

மேலும் நெல்லை வழியாக செல்லும் ரெயில்களான நெல்லை, செந்தூர், அனந்தபுரி, கன்னியாகுமரி ஆகிய ரெயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 225,140, 218, 100 என உள்ளது.

தமிழ் புத்தாண்டு முடிந்து ஏப்ரல் 17-ந்தேதி நெல்லை மற்றும் தென்காசியிலிருந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டது.

இதனை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரெயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைத்தது.

எனவே தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட வரும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News