தமிழ்நாடு
மாநில தேர்தல் ஆணையம்

பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், திருமழிசை, இடைக்கழிநாடு பேரூராட்சியில் நாளை மறைமுகத்தேர்தல்

Update: 2022-03-25 08:58 GMT
பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினரின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு விழா கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.

இதையடுத்து மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.

இதில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மொத்தம் 62 பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெறவில்லை

இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்கு நாளை (26-ந் தேதி) மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி தலைவர், துணைத் தலைவர், திருமழிசை, மீஞ்சூர் பேரூராட்சிகளில் துணைத் தலைவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைக்கழி நாடு பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-12, அ.தி.மு.க.-2, காங்கிரஸ்-1, சுயேட்சைகள்-6 இடங்களை பிடித்து உள்ளனர்.

கடந்த 4-ந் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது தலைவர் வேட்பாளராக தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்த 18-வது வார்டு உறுப்பினர் காஞ்சனாவை எதிர்த்து அப்போதைய தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமாரின் மனைவி மாலதி போட்டி வேட்பாளராக களத்தில் குதித்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலின் போதும் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.

தலைவர் பதவிக்கு காஞ்சனாவை எதிர்த்து கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இதேபோல் துணைத்தலைவர் பதவியை பிடிக்கவும், கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க.-12, சுயேட்சைகள்-4, காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-1 வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் தேர்தலில் 10-வது வார்டு கவுன்சிலர் ருக்குமணி மோகன்ராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு அப்போது வார்டு உறுப்பினர்கள் யாரும் போட்டியிடவில்லை என்பதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. கட்சி மேலிடம் துணை தலைவர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் கட்சியின் துணைத்தலைவர் பதவியை பிடிக்க உறுப்பினர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

திருமழிசை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தி.மு.க.-அ.தி.மு.க. தலா 6 இடங்களிலும், ம.தி.மு.க. - பா.ம.க. மற்றும் சுயேட்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் சுயேட்சை கவுன்சிலர் அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அ.தி.மு.க.- தி.மு.க.வும் சரிசமமாக உள்ளது.

தி.மு.க. 4-வது வார்டு உறுப்பினர் வடிவேலு பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். செல்லாத ஓட்டு பிரச்சினை காரணமாக துணைத்தலைவர் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை துணைத்தலைவர் மறைமுகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் தி.மு.க. சார்பில் 8-வது வார்டு உறுப்பினர் மகாதேவன் மற்றும் அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. 9-வது வார்டு உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர் போட்டியிட்டு உள்ளனர்.

தற்போது இருந்து வரும் சூழ்நிலையில் அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை வார்டு உறுப்பினர்கள், துணை தலைவர் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழி நாடு பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களையும் பிடித்தன.

பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட 15-வது வார்டு உறுப்பினர் சம்யுக்தா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலை 2.30 மணிக்கு நடைபெற இருந்த துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. நாளை நடைபெற உள்ள துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., உறுப்பினர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளனர். இதில் பா.ம.க.வை சேர்ந்த கணபதி துணைத்தலைவர் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


Tags:    

Similar News