தமிழ்நாடு
ராஜினாமா செய்த சேர்மதுரை.

முதல்-அமைச்சர் உத்தரவையடுத்து திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் ராஜினாமா

Published On 2022-03-12 07:05 GMT   |   Update On 2022-03-12 07:05 GMT
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது திருவேங்கடம் பேரூராட்சி. இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 வார்டுகளில் தி.மு.க., 4 வார்டுகளில் ம.தி.மு.க., 3 வார்டுகளில் சுயேட்சைகள், அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து தலைவர் பதவியை கைப்பற்றின. இதற்கிடையே இந்த பேரூராட்சி தலைவர் பதவியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக தி.மு.க. தலைமை அறிவித்தது.

அதன்படி ம.தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலமுருகன் என்பவர் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மறைமுக தேர்தலின்போது தி.மு.க.வை சேர்ந்த 9-வது வார்டு கவுன்சிலர் சேர்மதுரை போட்டி வேட்பாளராக நின்றார்.

இதனால் சேர்மதுரை 8 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவரானார். இதுகுறித்து ம.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. தலைமைக்கு புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் சேர்மதுரை பதவியை வாபஸ் பெறுவதில் தயக்கம் காட்டி வந்த நிலையில், தன்னை காண்பதற்கு வரும்போது போட்டி வேட்பாளர்கள் கண்டிப்பாக வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து தலைவர் பதவியை சேர்மதுரை ராஜினாமா செய்தார்.

Tags:    

Similar News