தமிழ்நாடு
ஆம்னி பஸ்

தமிழகம் முழுவதும் 2,800 ஆம்னி பஸ்கள் நிறுத்தம்- அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு

Published On 2022-02-21 09:45 GMT   |   Update On 2022-02-21 09:45 GMT
தினமும் எகிறும் டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வால் 2,800 பஸ்களை இயக்க முடியாமல், அதற்கான கடன் செலுத்தாததால் ஜப்திக்கு பயந்து நிறுத்திவிட்டதால் தற்போது 1,200 பஸ்கள் மட்டும் இயங்குகின்றன.
சேலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே ஆம்னி பஸ் சேவை கடுமையாக பாதித்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. எனினும் முன்பு போல முழுமையாக இயங்காததால் உரிமையாளர்களுக்கும் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

ஆம்னி பஸ் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தொழிலை தொடர முடியாத நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சொகுசு பஸ் வாங்க 50 லட்சம் முதல் 1,50 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. இதில் 50 லட்சத்தில் வாங்கப்படும் சொகுசு பஸ் 500 கி.மீ. இயங்கினால் தற்போதைய டீசல் விலையில் அதற்கான எரிபொருள் செலவு மட்டும் 12 ஆயிரத்து 750 ரூபாய் ஆகிறது.

இதுபோக சாலை வரி 2,500, தேய்மானம் 2,100, டிரைவர், உதவியாளர் சம்பளம் 2,000 உள்பட தினமும் 26 ஆயிரத்து 350 ரூபாய் செலவாகிறது.

ஒரு பஸ்வை வைத்து இயக்குபவர் பராமரிப்பு, எப்.சி., வேலை பார்ப்பது என ஆண்டில் பல நாட்கள் பஸ்களை இயக்க முடியாமல் போய்விடுகிறது. கொரோனா காலத்தில் 500 நாட்களுக்கு மேல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாததால ஒரு பஸ்சுக்கு வட்டி மட்டும் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அதை மீண்டும் இயக்க 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 600 ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மூலம் மாநில அரசின் அனுமதி பெற்றது 1,600. வெளி மாநில அனுமதி பெற்றது 2,400 என மொத்தம் 4,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் எகிறும் டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வால் 2,800 பஸ்களை இயக்க முடியாமல், அதற்கான கடன் செலுத்தாததால் ஜப்திக்கு பயந்து நிறுத்திவிட்டதால் தற்போது 1,200 பஸ்கள் மட்டும் இயங்குகின்றன.

3 மாதத்தில் தொழிலை தொடர முடியாத சோகம், கடன் தொல்லையால் 10 ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தற்கொலை செய்துவிட்டனர்.

ஆம்னி பஸ்களுக்கு ஸ்டாப் பேஜ் (இயக்காமல் நிறுத்தி வைத்தல்) சாலை விதி உள்ளது. இப்படி நிறுத்தி வைக்கப்படும் பஸ்சுக்கு மாநில அரசின் வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.

இந்த முறைக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் மாநில அரசு முடிவில் இருந்து பின் வாங்கியது. 2021 ஆக்டோபர் 20-ந் தேதி வரை ஸ்டாப்பேஜ் முறை ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான வரியை செலுத்தவும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு பதில் கொடுத்த நிலையில் 368 ஆம்னி பஸ்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து வருகின்றனர்.

அரசுக்கு 8 கோடி ரூபாய் வரி இழப்பு, உரிமையாளர்களுக்கு 30 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆம்னி பஸ் தொழில் மீண்டும் பழைய நிலையை அடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தலையிட்டு இத்துறையில் நிலவும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News