தமிழ்நாடு
மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய காட்சி

சேலத்தில் குடியரசு தின விழா

Update: 2022-01-26 08:55 GMT
சேலத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில்  குடியரசு தின விழா  சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று  நடைபெற்றது. இக்குடியரசு தினவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா காலை 8.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.

இதனை தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று முதலாம் படைப்பிரிவு, இரண்டாம் படைப்பிரிவு, மூன்றாம் படைப்பிரிவு, சேலம் மாவட்ட ஊர் காவல்படை, காவல்துறையின் இசைக்குழு உள்ளிட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல் துறை, மாவட்ட தீயணைப்புத்துறை, பொதுப் பணித்துறை, கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, கலைபண்பாட்டுத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 304 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை  மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா வழங்கினார்.

விழாவில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய  57 காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News