தமிழ்நாடு
மாணவி கஸ்தூரி

மருத்துவ தரவரிசை பட்டியலில் குளறுபடி- ஏழை மாணவி கண்ணீர் மனு

Update: 2022-01-26 05:36 GMT
மருத்துவ தரவரிசை பட்டியலில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எனது பெயர் இடம் பெறவில்லை. என்னை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது என்று மாணவி கஸ்தூரி கூறினார்.
சேலம்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த கரிக்காப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. தறி தொழிலாளி, இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு மனுவை கொடுத்தார். பின்னர் மாணவி கஸ்தூரி கண்ணீர் மல்க கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நான் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றேன். ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2020-ம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிடப்பட்டுள்ள மருத்துவ தரவரிசை பட்டியலில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எனது பெயர் இடம் பெறவில்லை. அதேசமயம், என்னை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுபடி எம்.பி.சி. பிரிவில் 230 மதிப்பெண் பெற்றாலே போதுமானது. ஆனால், 252 மதிப்பெண்கள் பெற்றும் எனது பெயர் இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. மாறாக பொதுப்பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அரசின் சலுகை கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு பறி போய் விட்டது.

பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மருத்துவம் படிக்க லட்சக்கணக்கில் பணம் செலவாகும். எனது பெற்றோர் தறி தொழிலாளிகள் என்பதால் அதிக பணம் கொடுத்து படிக்க முடியாக நிலை உள்ளது. குளறுபடிகளை களைந்து பொதுப்பட்டியலில் உள்ள எனது பெயரை அரசு ஒதுக்கீடு பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் படிக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சேலம் மவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனிடம் கேட்டபோது, சேலம் மாவட்டத்தில் இதுபோல் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் வழங்கிய புகார் மனுக்கள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags:    

Similar News