தமிழ்நாடு
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை

குடியரசு தின விழா - சென்னை மெரினா சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு

Published On 2022-01-26 00:22 GMT   |   Update On 2022-01-26 01:34 GMT
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சென்னை குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா இன்று காலை நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். 

அதன்பின் முப்படையினர், கடலோர காவல்படை, முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப் படை, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, காவல், சிறை, தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, கடல்சார் கழகம் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்கிறார்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, அண்ணா பதக்கம், உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம், திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது, மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.  

பின்னர் செய்தி, சுகாதாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடக்கும்.

அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பள்ளி குழந்தைகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் விழா நடக்கும் பகுதியில் 5 அடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டு ஒரு மணி நேரம் விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு 30 நிமிடங்கள் மட்டும்  நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News