தமிழ்நாடு
கோவை மார்க்கெட்டில் வாழை இலைகள் சாப்பிடுவதற்கு வசதியாக வெட்டி தயார் செய்யப்படும் காட்சி.

ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகள்- கட்டுப்பாட்டை தளர்த்த வலியுறுத்தல்

Update: 2022-01-25 10:13 GMT
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கோவையில் பல்வேறு உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்தது. தேங்காய், தக்காளி, காளான் கறிவேப்பிலை உள்ளிட்ட பொருள்களின் விலை சரிவை நோக்கி செல்கிறது.
கோவை:

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு முடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ஒருநாள் பயன்படுத்தும் விவசாய பொருள்களான இலை வாழை, கறிவேப்பிலை, காளான், வெற்றிலை, வாழைப்பழம், தக்காளி, ரோஜா உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள் தேக்கம் அடைந்தது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட பகுதிகளில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்தது.

இதேபோல தொண்டாமுத்தூர், தடாகம், மதுக்கரை, சூலூர், உள்ளிட்ட பகுதிகளில் இலை வாழை தேக்கம் அடைந்தது. ஓட்டல்களில் பார்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் கூட இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான ஓட்டல்கள் இயங்குவதில்லை. இதனால் இலை வாழையின் விற்பனை பாதிப்படைந்துள்ளது.

இதே போல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் விளையும் காளான், தக்காளி உள்ளிட்ட பொருட்களும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக தேக்கமடைந்து மீண்டும் திங்கட்கிழமை மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது.

ரோஜா மலர்களை பொறுத்தவரை கோவையில் வெள்ளக்கிணறு, கஸ்தூரி நாய்க்கன்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிற்கு திறந்தவெளி மற்றும் பசுமை குடில்கள் மூலம் பயிரிடப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த ரோஜா மலர்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரோஜா பூ முட்செடியுடனான கட்டு ரூ.150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகும். முழு ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் தோட்டத்துக்கே வந்து ஒரு கட்டு ரூ.50 முதல் 60 ரூபாய் வரை மட்டுமே கொடுத்து வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கோவையில் பல்வேறு உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்தது. தேங்காய், தக்காளி, காளான் கறிவேப்பிலை உள்ளிட்ட பொருள்களின் விலை சரிவை நோக்கி செல்கிறது. ஊரடங்கை காரணம் காட்டி சில மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து குறைவான விலையில் கொள்முதல் செய்து மார்க்கெட்டுகளில் அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு என்றாலே முதலில் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். ஞாயிறு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஊரடங்கு காலகட்டத்தில் பூக்கள் சாகுபடி கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஒரு நாள் தள்ளிப்போவதால் செடியிலேயே அழுகும் நிலை ஏற்படுகிறது.

இதேபோல பழ வகைகளான வாழை பழம், கொய்யாப்பழம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வைத்திருக்கும்போது நாட்கள் தள்ளிப் போவதால் அழுகி விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஊரடங்கு காலகட்டத்தில் உழவர் சந்தைகளை திறக்கவும், வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்
Tags:    

Similar News