தமிழ்நாடு
அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு

Published On 2022-01-24 05:41 GMT   |   Update On 2022-01-24 05:41 GMT
பெண்கள் வார்டில் ஆட்களை தேர்வு செய்து நிறுத்த சிரமப்பட வேண்டி உள்ளது. வட்டச் செயலாளரின் மனைவி அல்லது சகோதரி, குடும்ப உறுப்பினரை நிறுத்த வேண்டி உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அ.தி.மு.க.வில் வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மாவட்டக் கழக செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்று தலைமைக்கு பட்டியல் சமர்ப்பித்துள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு வார்டிலும் போட்டியிட கூடியவர்களை முடிவு செய்ய 2 பேர் கொண்ட பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டக் கழக செயலாளர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

தேனியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சனிக்கிழமை நடத்தி முடித்துள்ளார்.

இதே போல் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

இதே போல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேர் காணல் நடத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போல் அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்கள் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் போது, கட்சிக்காக உழைத்த விவரங்கள் பற்றியும் இதற்கு முன்பு என்னென்ன பதவிகளில் இருந்தார்கள் என்ற விவரங்களையும் கேட்டறிந்து, இந்த தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும் என்ற தகவலையும் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களை முடிவு செய்ய ஒவ்வொரு வார்டுக்கும் 2 பேர் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்.

அதில் ஒருவரை தலைமை ஒப்புதலுடன் தேர்வு செய்து அறிவிப்போம். கவுன்சிலர் பதவிக்கு உள்ளூரில் உள்ள செல்வாக்கு, ஜாதி, பலம், பண வசதி, கட்சியில் பணியாற்றும் விதம் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து முடிவு செய்கிறோம்.

கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட ஆண்களும், பெண்களும் நிறைய பேர் ‘சீட்’ கேட்கிறார்கள். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து ‘சீட்’ வழங்குவோம் என்றார்.

இதுபற்றி தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆண்கள் வார்டில் வேட்பாளர்களை நிறுத்துவதில் பெரும்பாலும் சிரமம் இருக்காது.

ஆனால் பெண்கள் வார்டில் ஆட்களை தேர்வு செய்து நிறுத்த சிரமப்பட வேண்டி உள்ளது. வட்டச் செயலாளரின் மனைவி அல்லது சகோதரி, குடும்ப உறுப்பினரை நிறுத்த வேண்டி உள்ளது.

ஆனாலும் பெரும்பாலான வார்டுகளுக்கு வேட்பாளரை தேர்வு செய்து விட்டோம். வார்டுக்கு 2 பேர் வீதம் ஒவ்வொரு வார்டுக்கும் பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News