தமிழ்நாடு
பாலத்தின் இணைப்பு பகுதி இடிந்து விழுந்திருப்பதை படத்தில் காணலாம்.

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது

Published On 2022-01-22 08:04 GMT   |   Update On 2022-01-22 08:04 GMT
பாலத்தின் ஒரு பகுதி 200 அடி நீளத்துக்கு இடிந்தது. அணைக்கரையில் பாலத்தை இணைப்பதற்கான சிமெண்ட் சிலாப் கொள்ளிடம் ஆற்றில் இடிந்து விழுந்தது.

சுவாமிமலை:

தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழி சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2010-ம் ஆண்டில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-விக்கிரவாண்டி சாலையையும் வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையில் 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

மேலும் இந்த 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் மேல் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.100 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பால கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வேலை முடிந்து தொழிலாளர்கள் சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென பாலத்தின் ஒரு பகுதி 200 அடி நீளத்துக்கு இடிந்தது. அணைக்கரையில் பாலத்தை இணைப்பதற்கான சிமெண்ட் சிலாப் கொள்ளிடம் ஆற்றில் இடிந்து விழுந்தது. காலையில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

தகவல் அறிந்த பொதுப்பணித்துறை, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். இருப்பினும் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து பால கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News