தமிழ்நாடு
தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி

திருவையாறு தியாகராஜர் 175வது ஆண்டு ஆராதனை விழா- பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி

Update: 2022-01-22 07:37 GMT
திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் ஆராதனை விழா இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் மட்டும் ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை 175-வது ஆராதனை விழா தொடங்கியது. முதலில் பஞ்சரத்ன கீர்த்தனையையொட்டி, காலை 6 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் உள்ள அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது.

இதையடுத்து அவரது சிலை உஞ்சவிருத்தி பஜனை பாடியபடியும் மேள தாளங்கள் முழங்கவும் பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து நாதஸ்வர, மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாடகி மகதி உள்ளிட்ட பல்வேறு இளை கலைஞர்கள் கலந்துகொண்டு ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும் இசைக்கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் கலந்து கொண்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் தெர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே அமைதிக்கப்பட்டனர். மேலும் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளார்களா எனவும் சோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

விழா ஏற்பாடுகளை தியாக பிர்ம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News