தமிழ்நாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக பெற்ற காருடன் மாடுபிடி வீரர் கார்த்திக்.

பரிசாக கிடைத்த காரை நிறுத்த வீட்டில் இடமில்லை- அரசு வேலை வழங்குமாறு மாடுபிடி வீரர் கோரிக்கை

Update: 2022-01-22 03:43 GMT
பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மிகவும் கஷ்டப்படக் கூடியவர்களாகவும், அன்றாடும் சாப்பாட்டுக்கே போராடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம்:

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் கடந்த 14-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கினார். அவருக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கப்பட்ட காரை அமைச்சர் மூர்த்தியிடம் இருந்து பெற்றார்.

மாடுபிடி வீரர் கார்த்திக் கூறியதாவது:-

பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மிகவும் கஷ்டப்படக் கூடியவர்களாகவும், அன்றாடும் சாப்பாட்டுக்கே போராடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள்.

என்னை போன்று மாடுபிடி வீரர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான் அதிகம். எனக்கு குடியிருக்க வீடு இல்லை. வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். வீடு இல்லாத எனக்கு வீதி உலா செல்ல கார் எதற்கு? கட்டிட தொழிலாளி மகனான என்னால் இந்த காரை வைத்து பெட்ரோல் போட முடியாது. காரை நிறுத்த இடம் கிடையாது. இதற்கு பதிலாக சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இதேபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த எனது தோழன் பாலமுருகன் எங்களுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல இடங்களில் வந்திருக்கிறார். மாடு வளர்ப்பவர்களுடன் இணைந்து வாடிவாசலில் காளைகளை அவிழ்ப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட தம்பி போன்ற தோழன் உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

நான் இதுவரை கோவை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு சைக்கிள், பீரோ, கட்டில், பிரிட்ஜ் போன்ற பரிசுகளை பெற்றிருக்கிறேன். நான் வெற்றி பெற்ற பொருள்களை பெரும்பாலும் நண்பர்களிடம் கொடுத்து விடுவேன். இந்த பொருட்களை வீட்டில் வைப்பதற்கு இடம் இல்லை என்பதால் கொடுத்து விடுகிறேன்.

என்னை போன்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமல்லாது வேடிக்கை பார்த்து உயிரிழந்தவர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

எனக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். தந்தை கட்டிட தொழிலாளியாகவும், தாய் வீட்டு வேலை செய்பவராகவும் இருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்த தம்பியின் சான்றிதழை பெற பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News