தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டியில் ஆக்ரோ‌ஷத்துடன் சீறிப்பாய்ந்த காளை.

கோவையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுகட்டிய வீரர்கள்

Published On 2022-01-21 05:38 GMT   |   Update On 2022-01-21 05:38 GMT
களத்தில் நின்று விளையாடும் காளைகள் மற்றும் காளைகளை பிடிக்க கூடிய மாடுபிடி வீரர்களுக்கு உடனுக்குடன் வெள்ளி பாத்திரங்கள், தங்க காசு, சைக்கிள் உள்பட எண்ணற்ற பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
கோவை:

கோவையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

கோவை செட்டிபாளையம் எல்.என்.டி.பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் இன்று அதிகாலை முதலே மாடுபிடி வீரர்கள், காளைகள், காளை உரிமையாளர்கள் என அனைவரும் குவிந்தனர். மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் அனைவரும் வாடிவாசல் முன்பு வரிசையாக நின்றனர்.

வீரர்களுடன் மல்லுக்கட்ட கூடிய காளைகளும் வாடிவாசல் முன்பு வரிசை கட்டி நின்றன.

காலை 6.45 மணியளவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் உள்ளிட்டோர் விழா மைதானத்திற்கு வந்தனர். கலெக்டர் சமீரன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினரும் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதன் பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முதலில் சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. கோவில் காளை என்பதால் வீரர்கள் யாரும் அதனை பிடிக்கும் முயற்சியில் இறங்கவில்லை.

அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக சீறிப்பாய்ந்து வந்தன.

களத்தில் சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் எதிர்கொண்டு அதனுடன் மல்லுக்கட்டி திமிலை பிடித்து காளையை அடக்கினர்.

ஒரு சில காளைகள் தங்கள் அருகில் வீரர்கள் யாரையும் விடாமல் களத்தில் சிறிது நேரம் நின்று விளையாட்டு காட்டியது. சில காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர்.

களத்தில் நின்று விளையாடும் காளைகள் மற்றும் காளைகளை பிடிக்க கூடிய மாடுபிடி வீரர்களுக்கு உடனுக்குடன் வெள்ளி பாத்திரங்கள், தங்க காசு, சைக்கிள் உள்பட எண்ணற்ற பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்ற 300 மாடுபிடி வீரர்களில் ஒவ்வொரு சுற்றாக 50 வீரர்கள் களம் இறங்கினர். இதில் ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். முன்னதாக ஒவ்வொரு காளையுடனும் அதன் உரிமையாளர் உள்பட 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி மற்றும் 48 மணி நேர கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் இருக்கிறதா எனவும் சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி உள்ளூர் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தடையை மீறி மக்கள் அங்கு அதிகளவில் குவிந்து விட வாய்ப்புள்ளதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மைதானத்தை சுற்றிலும் பேரிகார்டு அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ உதவி மையமும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு மருத்துவர், நர்சு உள்ளிட்டோர் பணியில் இருந்தனர். லேசான காயம் அடைந்த வீரர்களுக்கு அங்கு வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்த அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சும் மைதானத்தின் அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடக்கிறது.
Tags:    

Similar News