தமிழ்நாடு
.

மோசடி நிறுவனங்கள் குறித்து புகார் கொடுக்க போலீசார் அழைப்பு

Published On 2022-01-18 12:00 GMT   |   Update On 2022-01-18 12:00 GMT
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மோசடி நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
சேலம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சங்ககிரி மெயின்ரோடு கொங்கு காம்ளக்சில் ஸ்ரீவேல்முருகன் ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் சேலம் மாவட்டம் வலசையூர், சுக்கம்பட்டி, ஓமலூர், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் தவணை முறையில் மாதந்தோறும் பணத்தை டெபாசிட்டாக பெற்றுக் கொண்டு வீட்டுமனை நிலம் கொடுப்பதாக சொல்லியது.

ஆனால் நிலத்தினை ஒதுக்கீடு செய்யாமலும், டெபாசிட் தொகையை திருப்பி கொடுக்காமலும் இந்த நிறுவனம் ஏமாற்றியதாக அதன் உரிமையாளர்கள் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ரவி, இவரது மனைவி ஜெயந்தி, ராசிபுரம் பகுதியை சேர்ந்த  ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது சேலம் அரிசிபாளையம் வேலாசாமி தெருவை சேர்ந்த ஜெயசங்கர் புகார் கொடுத்தார்.  

இதேபோல்  சேலம்  சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த திவாகர் என்கிற ராஜா என்பவர் சீலநாயக்கன்பட்டி பி.எம்.நகரில் எப்ஏபிபி கட் டெக்னாலஜி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிறுவனம் ஆன்லைன் மூலமாக பணம் வசூல் செய்து டெய்லர் பயிற்சி கொடுத்தும், இதற்கான துணிகளையும் கொடுப்பதாகவும் விளம்பரம் செய்து வந்தது. 

இதை நம்பி அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் செலுத்தியதாகவும், பின்னர்  அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும், இதுபோல் பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளதாகவும் அம்மாப்பேட்டை மக்கான்தெருவை சேர்ந்த சுகுந்தன் (22) என்பவர் புகார்  கொடுத்தார்.

கிருஷ்ணகிரி டவுன் ராயப்பமுதலி தெருவில் சேலஞ்ச் அசெட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தினசரி சேமிப்பு திட்டத்தில் ரூ.100 வீதம் செலுத்தினால் 480 நாட்களில் ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறியது. 

 இதை நம்பி சேலம் ஏ.வி.எம்.ஆர்.நகரை சேர்ந்த மனோகரன் (62)  ரூ.50 ஆயிரம் செலுத்தியதாகவும், அந்த தொகைக்கு 4 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் தருவதாக நிறுவனத்தினர் கூறியதை அடுத்து, 4 வருடங்கள் கழித்து நான் கட்டிய  பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் உரிமையாளர்கள் தமிழ்செல்வன், அசோக்குமார் மீது புகார் கொடுத்தார்.

 இதனை தொடர்ந்து மேற்கண்ட நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.  

மேலும் இந்நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News