தமிழ்நாடு
சென்னை மாநகராட்சி

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் குறித்த விவரம் அளிக்காத 6 ஆஸ்பத்திரிகளுக்கு நோட்டீஸ்

Update: 2022-01-09 03:59 GMT
கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் குறித்த விவரம் அளிக்காத 6 ஆஸ்பத்திரிகளுக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்பு அறிகுறியுள்ளவர்கள் குறித்த தகவல்களை மாநகர நல அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 538 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 74 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இந்த தனியார் ஆஸ்பத்திரிகள், ஸ்கேன் மையங்கள், பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கொரோனா அறிகுறி உள்ளோர் குறித்த தகவல்களை பெற மாநகராட்சி சார்பில் 15 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ந்தேதி பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் 960 பேரும், ஸ்கேன் மையங்களில் 199 பேரும் என 1,159 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் அந்த நபர்களை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 187 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தேனாம்பேட்டை மண்டலத்தில் 57 பேரும், அடையாறு மண்டலத்தில் 23 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 21 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 15 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 பேரும் அடங்குவார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை வழங்காத 6 தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News