தமிழ்நாடு
பள்ளி மாணவர்கள்

தெலுங்கானாவில் ஜனவரி 8-16 கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

Published On 2022-01-04 10:15 GMT   |   Update On 2022-01-04 11:02 GMT
அரசு மருத்துவமனைகளில் 99 சதவீத படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் தெரிவித்தார்.
ஐதராபாத்:

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவ்வகையில், தெலுங்கானா மாநிலத்தில் வரும் 8ம்தேதி முதல் 16ம் தேதிவரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அதேசமயம், இப்போதைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என்றார்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. எனினும், கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் வலியுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகளில் 99 சதவீத படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு சதவீத படுக்கைகளையும் உடனடியாக மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 140 டன்னிலிருந்து 324 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர்  குறிப்பிட்டார்.
Tags:    

Similar News