தமிழ்நாடு
வனப்பகுதி நுழைவாயிலில் கட்டண வசூலில் ஈடுபட்ட வனத்துறையினர்

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தலங்களுக்கு கட்டணம் திடீர் உயர்வு

Published On 2022-01-04 08:10 GMT   |   Update On 2022-01-04 08:10 GMT
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையானது தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும் இந்த சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நபர் ஒருவருக்கு மோயர் சதுக்கம் நுழைவு கட்டணம் ரூ.10, குணா குகை நுழைவு கட்டணம் ரூ.10, பில்லர் ராக் நுழைவு கட்டணம் ரூ.5 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நுழைவு பகுதியில் ஒரே கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.30, பெரியவர்களுக்கு ரூ.50, சிறிய வாகனங்களுக்கு ரூ.50, பெரிய வாகனங்களுக்கு ரூ.70, பேருந்துகளுக்கு ரூ.100, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, கேமராவிற்கு ரூ.50 என்று அறிவித்துள்ளது.

எந்தவித முன்அறிவிப்பும் இன்றி சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் திடீரென்று கட்டண வசூலில் ஈடுபடுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே வனத்துறை கவனம் செலுத்தி திடீரென்று உயர்த்தப்பட்டுள்ள நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு சுற்றுலா தலத்திலும் முறையான வாகன நிறுத்தம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, தரமான சாலை வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் கட்டண கொள்ளையில் மட்டும் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




Tags:    

Similar News