தமிழ்நாடு
மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தார்

எத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது- அண்ணாமலை

Published On 2022-01-03 07:12 GMT   |   Update On 2022-01-03 07:12 GMT
தி.மு.க. கட்சிக்குள் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதில் முரண்பாடுகள், குழப்பங்கள் நிலவி வருகின்றன என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை:

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளையொட்டி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மனின் சிலைக்கு பா.ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், விவேகம் இளைய சமுதாயத்துக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. அதுபோல வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சி சார்பில் பாஞ்சாலங்குறிச்சியிலும், சிவகங்கையிலும் விழா எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு சிவப்புடன் நீலமும் சேர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். அவர் சொன்ன கலர் காமினேசன் புரியவில்லை. பா.ஜனதா கட்சியை பொருத்தவரை யாரையும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. எல்லா கலர்களும் எங்களுக்கு வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தற்போது காற்று இல்லா பலூனாகி விட்டது. அதனால் தான் நாடு கடத்தப்படுவதுபோல, அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி நாட்டை விட்டு காணாமல் போய் விடுகிறார். காங்கிரஸ் கட்சியின் சரித்திரம் இந்திய அளவில் முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் விரைவில் முடிவுக்கு வரும். அவர்கள் தி.மு.க.வின் ‘பி’ டீமாக எத்தனை நாள் இருப்பார்கள் என்று பார்ப்போம்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இணைந்தனர். ஆனால் பா.ஜனதா மகத்தான வெற்றியை பெற்றது. அதனால்தான் தற்போது காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தனித்துபோட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்திய மக்கள் அனைவரும் பா.ஜனதா பக்கம் இருக்கிறார்கள். எனவே எத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருவதால் மாநில அரசின் கட்டுப்பாடுகளை ஒரு சதவீதம்கூட மீறாமல் கடைபிடித்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும்போது கட்சி சார்பில் மோடி பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழர் கலாசாரம் மீறப்படவில்லை.

மோடி எங்களோடு சேர்ந்து தமிழக கலாசாரத்தோடு இணைந்து பொங்கல் வைப்பதால் ‘மோடி பொங்கல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமை ஆகும். டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து வந்து ஜல்லிக்கட்டை பார்ப்பது பெருமை அல்ல.

கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் 4 ரூபாயும் குறைப்பதாக கூறினார்கள். ஆனால் தி.மு.க. கட்சிக்குள் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதில் முரண்பாடுகள், குழப்பங்கள் நிலவி வருகின்றன.

டி.ஆர்.பாலு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அது கூடாது என்கிறார். இப்படி முரண்பாடுகளுடன் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக ஒரே நிலைபாட்டை தி.மு.க. எடுக்கட்டும். பின்னர் அதுகுறித்து பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதையும் படியுங்கள்...15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tags:    

Similar News