தமிழ்நாடு
மணிமுத்தாறு அணை

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை- மணிமுத்தாறில் 18 மில்லி மீட்டர் பதிவு

Published On 2021-12-31 06:03 GMT   |   Update On 2021-12-31 06:03 GMT
பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1,105 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்து உள்ளது.

தற்போது மார்கழி குளிர் அதிகமாக உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதம் குறைந்த அளவே தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும். டிசம்பர் மாத தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பாளை மற்றும் நெல்லை மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 18.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.

நாங்குநேரியில் 9 மில்லி மீட்டரும், நம்பியாறு, சேரன்மகாதேவி பகுதியில் தலா 7 மில்லி மீட்டர் மழையும், கொடுமுடியாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. நெல்லை, பாளை, கன்னடியன் கால்வாய் பகுதியில் சராசரியாக 1 மில்லி மீட்டர் அளவுக்கு சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை ஏதுவும் பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாவிட்டாலும் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1,105 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 134.55 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.96 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 285 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 285 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116.40அடியாக உள்ளது.

இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளுக்கும் குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மழை குறைந்துள்ளதால் தற்போது ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து கடலுக்கு தண்ணீர் செல்லவில்லை. தாமிரபரணி ஆற்றில் அனைத்து கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News