தமிழ்நாடு
பெரியாறு அணை

பெரியாறு அணை நீர்மட்டம் 14-வது முறையாக 142 அடி தேக்கம்

Published On 2021-12-14 07:47 GMT   |   Update On 2021-12-14 07:47 GMT
நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்ட போதிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு 14-வது முறையாக 142 அடி வரை தேக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி இரவு 142 அடியாக தண்ணீர் தேக்கப்பட்டது. அதன் பிறகு மழை சற்று குறைந்த போதிலும் உபரி நீர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு திறக்கப்பட்டு நீர் மட்டத்தை 141 அடிக்கு கீழ் குறைய விடாமல் கண்காணிக்கப்பட்டது.

அதன்படி நவம்பர் 30-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அணையின் நீர் மட்டம் 13 முறை 142 அடி வரை நிலை நிறுத்தப்பட்டது. நேற்று காலை அணையின் நீர் மட்டம் 141.95 அடியாக இருந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 700 கன அடியாக குறைக்கப்பட்டது.

இதனால் இன்று காலை 14-வது முறையாக அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்ந்தது. நீர் பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்ட போதிலும் ஒரே ஆண்டில் 14 முறை 142 அடி வரை தேக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீர் வரத்து 1023 கன அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 700 கன அடி வீதமும், கேரள பகுதிக்கு 144 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7666 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 142 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதன்படி கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று காலை முதல் தொடர்ந்து 700 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டமும் இன்று காலை நிலவரப்படி 70.18 அடியாக உள்ளது. நேற்று 2380 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1501 கன அடியாக குறைந்தது. இதே போல் நேற்று 2576 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 1384 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.
Tags:    

Similar News