தமிழ்நாடு
கணவருடன் தீபா

ஜெயலலிதா மரண மர்மத்தை சசிகலா வெளியிட வேண்டும்- தீபா பரபரப்பு பேட்டி

Published On 2021-12-11 07:10 GMT   |   Update On 2021-12-11 12:08 GMT
வீட்டில் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இப்போது இல்லை. மோசமான நிலையில் இந்த வீடு உள்ளது. அது வேதனை அளிக்கிறது. அழகாக இருந்த அந்த வீடு பாழடைந்து உள்ளது. பராமரிப்பு பணிகள் அதிகளவில் செய்ய வேண்டி உள்ளது.

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. ஆனால் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவரது சகோதரர் தீபக் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும் எனவே ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான தீபா, தீபக்கிடம் போயஸ் கார்டன் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி தீபா, தீபக்கை நேரில் அழைத்து போயஸ்கார்டன் வீட்டு சாவியை ஒப்படைத்தார்.

இதையடுத்து தீபா தனது கணவர் மாதவனுடன் போயஸ்கார்டன் வீட்டுக்கு சென்றார். தீபக்கும் அங்கு வந்திருந்தார். போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் ஜெயலலிதா நின்று கையசைக்கும் பால் கனிக்கு சென்று அவரும் கையசைத்தார். பின்னர் வெளியில் வந்து பேட்டி அளித்த அவர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா மீதும் அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.

கே:- வீட்டுக்குள் சென்று வந்துள்ளீர்கள். வீடு எப்படி உள்ளது?

ப:- நாங்கள் குடும்பத்தோடு வாழ்ந்த வீடு இது. எங்கள் அப்பா-அம்மா திருமணத்துக்கு பிறகு இங்கு தான் வாழ்ந்தார்கள். அத்தை இறந்த பிறகு கூட என்னை பார்க்க விடவில்லை. இரவு முழுவதும் இந்த வீட்டு அருகே நின்று கொண்டிருந்தேன். அதையெல்லாம் மறக்க முடியாது. இதையெல்லாம் தாண்டி வீட்டுக்குள் வந்ததை பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

இந்த வீட்டில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அவர்களது ரசனைக்கேற்ற மாதிரி இருந்த வீட்டில் இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

எனது அத்தையின் படுக்கை அறை பெரிதாக இருக்கும். அதை சுருக்கி சிறியதாக்கி இருக்கிறார்கள். தேவையில்லாமல் 3 இடங்களில் கிரில் வைத்துள்ளனர். அவர் பயன்படுத்திய வாட்சு உள்ளிட்ட பொருட்களும் அங்கு இல்லை.

பெரும்பாலான அறைகள் சிறியதாக மாறியுள்ளன. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வீட்டில் இல்லை. காணாமல் போய் உள்ளன. அத்தையின் மறைவுக்கு பிறகு வீட்டில் இருந்தவர்கள் நிறைய மாற்றங்களை செய்துள்ளனர்.

கே:-2017-ம் ஆண்டு ஒரு அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி சீல் வைத்துள்ளனர். அந்த அறை எப்படி உள்ளது?

ப:- வருமான வரித்துறையினர் வீட்டுக்குள்ளே என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. செய்தியாகத்தான் நான் பார்த்தேன். சீல் வைக்கப்பட்ட அறை தற்போது திறந்துதான் உள்ளது. உள்ளே ஒன்றுமே இல்லை.

 


ஜெயலலிதா வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எதுவுமே வீட்டில் இல்லை. ஜெயலலிதா அதிகாரிகளை சந்திப்பதற்காக வீட்டில் பெரிய டேபிள் ஒன்றை போட்டு இருப்பார். அங்கு வைத்துதான் அவர்களை சந்திப்பார். தற்போது அந்த டேபிளையே காணவில்லை. அவர் பயன்படுத்திய கட்டில் கூட அங்கு இல்லை.

கே:- கடந்த ஆட்சியில் தனி சட்டம் கொண்டு வரப்பட்டு போயஸ்கார்டன் அரசுடமையாக்கப்பட்டது. அப்போது இழப்பீடாக ரூ.67 கோடி கொடுக்கப்பட்டது. அது உங்களிடம் உள்ளதா?

ப:- அது சிட்டிசிவில் கோர்ட்டில்தான் கொடுக்கப்பட்டது. எங்கள் கையில் கொண்டு வந்து ரூ.67 கோடியை தரவில்லை. இந்த வீட்டை பொறுத்தவரை நான் அவர்களோடு வசித்து இருக்கிறேன்.  வீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது கடும் அதிர்ச்சியாகவே உள்ளது.

கே:- இந்த வீட்டில் எப்போது குடியேற போகிறீர்கள்? அவரது பெயரில் அறக்கட்டளை எதுவும் தொடங்கும் எண்ணம் உள்ளதா?

ப:- விரைவில் அவரது பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும். கோர்ட்டும் இது தொடர்பாக அறிவுரைகள் வழங்கி உள்ளது. விரைவில் இந்த வீட்டில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் குடியேறுவேன்.

வீட்டில் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இப்போது இல்லை. மோசமான நிலையில் இந்த வீடு உள்ளது. அது வேதனை அளிக்கிறது. அழகாக இருந்த அந்த வீடு பாழடைந்து உள்ளது. பராமரிப்பு பணிகள் அதிகளவில் செய்ய வேண்டி உள்ளது.

அத்தை பயன்படுத்திய எந்த பொருட்களுமே வீட்டில் இல்லை. அனைத்தையும் அகற்றி உள்ளனர். பராமரிப்பு பணிகள் முடிவதற்கே நீண்ட நாட்கள் ஆகும். இப்போதைக்கு வீடு பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது.

மியூசியத்துக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர். அதையெல்லாம் அகற்ற வேண்டி உள்ளது. இப்படி மோசமான நிலையில் வீடு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கே:- அ.தி.மு.க.வுக்கு தற்போது என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:- கடந்த 4½ ஆண்டுகளாக இந்த வீட்டை எந்த பராமரிப்பும் இல்லாமல் போட்டு வைத்துள்ளனர். இவ்வளவு நேரமும் மிகவும் கஷ்டப்பட்டுதான் வீட்டுக்குள் இருந்தோம். அந்த அளவுக்கு வீடு உள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை அப்பீல் செய்து இருக்கிறார்கள். சட்ட ரீதியாக அதை நான் சந்திப்பேன். அவர்களை சந்தித்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க முடியாது. அப்படி கேட்பதிலும் எந்த பலனும் இல்லை.

கே:- ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிகொண்டுவர மறு விசாரணை நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதனை நீங்களும் வரவேற்று இருந்தீர்கள்? இப்போது அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

ப:- 100 சதவீதம் அத்தையின் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். இன்று இந்த வீட்டை பார்த்த பிறகு அது தொடர்பான விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்கிற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்த வீடு இருக்கிற சூழ்நிலையை பார்த்தாலே எனக்கு சந்தேகமாக உள்ளது. இங்கு என்ன நடந்தது? என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். அத்தைக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி முறையாக விசாரித்து தெரிவிக்க வேண்டும்.

ஆறுமுகசாமி ஆணையமாக இருந்தாலும் இல்லை வேறு ஆணையமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக அதை வெளியில் கொண்டு வர வேண்டும்.

சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் இந்த வீட்டில் ஆதிக்கம் செலுத்தி அதனை பாழ்செய்துள்ளனர். அங்கு அவர்கள் என்னதான் செய்தார்கள்? எனவே அவர்கள் மீது சந்தேகம் என்பது நிச்சயமாக உள்ளது.

எனது அத்தையின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசுக்கு இதனை கோரிக்கையாக அளிக்கிறேன். முறையாக விசாரணை நடத்தி ஜெயலலிதா மரணத்தில் உள்ள பல்வேறு மர்மங்களை வெளியே கொண்டுவர வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்று கோடான கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வீட்டை கேட்டவர்களுக்கு அவரது மரணம் இயற்கையானதுதானா? என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தாமல் அவர்கள் பின்வாங்கி உள்ளார்கள். எனவே முழு விசாரணை கண்டிப்பாக நடத்த வேண்டும்.

இந்த சொத்து விவகாரத்தில் சசிகலாவால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அத்தையுடன் வீட்டில் இருந்து இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

எங்களையெல்லாம் அத்தையோடு நெருங்க விடாமல் சசிகலா தடுத்தது உண்மைதான். இதுதான் வரலாறு. அனைவருக்குமே தெரியும்.

அத்தைக்கு இந்த வீட்டில் திடீரென என்ன நடந்தது? என்ற மர்மத்தை விசாரணை மூலம் வெளியில் கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது.

கே:- இந்த வீட்டை உங்களிடம் இருந்து சசிகலா வாங்கி விடுவார் என்று ஒரு பேச்சு உள்ளதே?

ப:- அப்படி மறைமுகமாக ஏதாவது செய்ய முடியுமா? இது என்ன கடையில் கத்தரிக்காய் வாங்குவது போன்றதா?

ஒரு மனிதர் உறவினர்கள், நண்பர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக வாழவே முடியாது. அப்படி ஒரு கட்டாயத்தில் எங்கள் அத்தையை இந்த வீட்டில் உட்கார வைத்துள்ளனர்.

அந்த விதத்தில் அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. இது எனக்கு மட்டும் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான சந்தேகம். அந்த மாதிரி சந்தேகங்களை விளக்க வேண்டிய கடமையும் சசிகலாவுக்கு உள்ளது.

இந்த வீட்டுக்குள்ளேயே அத்தையுடன் வசித்து வந்துள்ளார். இதுவரை அவரும், அவரது குடும்பத்தினரும் நாங்கள் அவரை எதுவும் செய்யவில்லை என்றும் நன்றாகத் தான் பார்த்துக் கொண்டோம் என்றும் தெரிவிக்க வில்லையே ஏன்?

இப்போது கூட கட்சி வேண்டும்? அரசியல் வேண்டும்? என்று கேட்டு இருக்கிறார்கள். அவரை (ஜெயலலிதாவை) முறையாக பராமரித்தார்களா? என்பதை முறையாக விளக்கவில்லை. அப்படி இருக்கும்போது விசாரணை நடத்திதான் அதனை வெளியில் கொண்டுவர வேண்டும்.

கே:- இந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு எதிர்பார்க்கிறீர்களா?

ப:- பணரீதியாக சசிகலா அதிகாரம் மிக்கவராக உள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வலுவான அரசியல் கட்சியாக உள்ளது. தொண்டர்கள் அதிகமாக உள்ளனர். இப்படி இரண்டு அதிகாரமிக்கவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கும் நேரத்தில் என்னை போன்ற சாதாரணமானவரிடம் வீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் யாராவது வந்து தகராறு செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தீபா கூறினார்.

இதையும் படியுங்கள்... மதுரை மேம்பால விபத்து: அனுபவமில்லாத தொழிலாளர்களே காரணம்- விசாரணை அறிக்கை தாக்கல்

Tags:    

Similar News