தமிழ்நாடு
குவாரியில் மீட்கப்பட்ட அரவிந்த் உடல்

கார் டிரைவர் கொலையில் மாமியார் உள்பட 3 பேர் கைது

Published On 2021-12-09 07:06 GMT   |   Update On 2021-12-09 07:06 GMT
மகளை கொடுமைப்படுத்தியதால் மருமகனை கொல்ல மாமியார் ரூ.5 லட்சம் பேரம் பேசிய தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெருநாழி விலக்கு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 30). இவரது மனைவி மாலா(25). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அரவிந்த் கடந்த 3-ந்தேதி தென்காசி செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாலா, தென்காசி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடத்திய விசாரணையில் அரவிந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கீழப்புலியூரை சேர்ந்த மாரியப்பன் மகன் பொன்னரசு(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் உள்பட 4 பேர் சேர்ந்து அரவிந்தை கொலை செய்ததும், உடலை பாட்டாக்குறிச்சியில் உள்ள ஒரு கல்குவாரியில் வீசியதும் தெரியவந்தது.

பொன்னரசு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த தம்புரான் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாலாவின் தாயார் பொன்ராணி, தனது மருமகன் அரவிந்தை கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவல்கள் வருமாறு:-

தென்காசி கீழப்பூலியரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக விளாத்திகுளத்திற்கு குடும்பத்துடன் சென்று வசித்து வருகிறார். இவரது மகள் மாலா.

இந்நிலையில் அரவிந்துக்கும், மாலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் அவர்களது எதிர்ப்பை தாண்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரவிந்த் திருமணம் முடிந்த நாளில் இருந்தே எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மாலாவையும் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொன்ராணி, விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு மாலாவை அழைத்துள்ளார். இதுதொடர்பாக மாமியார்-மருமகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் கஷ்டப்படுவதை தாங்கமுடியாத பொன்ராணி, அரவிந்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக தங்களது சொந்த ஊரான கீழப்புலியூரை சேர்ந்த தனது உறவினர் வசந்த்(25) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் உதவி செய்வதாக கூறி உள்ளார்.

உடனே 2 பேரும் கீழப்புலியூரை சேர்ந்த பொன்னரசுவை நேரில் சென்று சந்தித்து பேசி உள்ளனர். அவர் தனது கூட்டாளிகளான சீதாராமன், மணிகண்டன், தம்புரான் ஆகியோருடன் சேர்ந்து அரவிந்தை தீர்த்துக்கட்ட ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர். பொன்ராணி ரூ.4லட்சம் தருவதாக கூறி உள்ளார். முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 3-ந்தேதி தென்காசியில் கார் டிரைவர் பணிக்கு ஆள் எடுப்பதாக அரவிந்துக்கு போன் மூலம் சீதாராமன் தெரிவித்துள்ளார். சீதாராமன் கீழப்புலியூரை சேர்ந்தவர் என்பதால் அரவிந்த் அவருடன் அடிக்கடி பேசி பழகி உள்ளார். இதனால் சீதாராமன் அழைத்தவுடன் அரவிந்த் தென்காசிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்குள்ள தனியார் விடுதியில் அரவிந்த் மற்றும் சீதாராமன் அறை எடுத்து தங்கி உள்ளனர். மறுநாள்(4-ந்தேதி) காலை ஒரு காரில் சீதாராமன் தனது கூட்டாளிகளை அழைத்து வந்துள்ளார். அரவிந்தை அந்த காரை ஓட்டுமாறு அழைத்து சென்று காட்டுப்பகுதியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர் பாட்டாக்குறிச்சியில் உள்ள குவாரியில் அரவிந்த் உடலை கல்லை கட்டி தூக்கி வீசி விட்டு தலைமறைவாகி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்ராணியை கைது செய்தனர். பொன்ராணிக்கு கூலிப்படையை அடையாளம் காட்டி, இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வசந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News