தமிழ்நாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாளை தரிசனம் செய்தார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்

Published On 2021-12-09 05:51 GMT   |   Update On 2021-12-09 05:51 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி கோவில் வெளி பிரகாரத்தில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கினார்.
திருச்சி:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திருச்சிக்கு வருகை தந்தார்.

விமான நிலையத்தில் கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்ற அவர் நேற்று மாலை அங்குள்ள நூலகத்தை ஆய்வு செய்து, நூலக ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், இணைவு பெற்ற கல்லூரி கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், முதுகலை மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரவு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரெங்கா ரெங்கா கோபுர நுழைவு வாயிலில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் சிவராசு, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பட்டர்கள் வேத மந்திரம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமானுஜர் சன்னதி, மூலஸ்தானம், தாயார் சன்னதி, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசனம் செய்த அவர் கோவில் வெளி பிரகாரத்தில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கினார். இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News