தமிழ்நாடு
மூதாட்டி

மீன் நாற்றம் வீசுவதாக கூறி மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கண்டக்டர்

Published On 2021-12-07 08:43 GMT   |   Update On 2021-12-07 08:43 GMT
குளச்சலில் மீன் நாற்றம் வீசுவதாக கூறி மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கண்டக்டரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
குளச்சல்:

குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரை கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

மூதாட்டி தினமும் காலையில் தலைசுமடாக மீன்களை எடுத்து சென்று குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்.

இரவு குளச்சலில் இருந்து மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மூதாட்டி மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

மூதாட்டியை கண்ட கண்டக்டர் அவர் மீது மீன் நாற்றம் வீசுவதால் பஸ்சில் இருந்து இறக்கி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி பஸ் நிலைய கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று நியாயம் கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் குளச்சல் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி அங்கிருந்த பயணிகளிடம் தன் ஆதங்கத்தை கூறியபடி கண்கலங்கி நின்றதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

பஸ் கண்டக்டரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ உயர் அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News