மதுரையில் கடந்த நவம்பர் மாதத்தில் கிராமப்புறத்தில் இருந்து 18 பேரும், நகர் பகுதியில் இருந்து 19 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 37 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அக்டோபர் மாதம் 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 345 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். மதுரையில் 2020-ம் ஆண்டு 279 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்தது. டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் அக்டோபர்-நவம்பர் மழைக்காலம் என்பதால், அந்த மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும். இருந்தபோதிலும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் தேங்கி நிற்கும் மழை நீரில் மண்ணெண்ணெய் பந்துகளை போடுவது, குடிதண்ணீரில் குளோரின் கலப்பது, அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்துகளை தெளிப்பது ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
மதுரையில் கடந்த நவம்பர் மாதத்தில் கிராமப்புறத்தில் இருந்து 18 பேரும், நகர் பகுதியில் இருந்து 19 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு பாதிப்பு டிசம்பர் மாதத்தில் குறைய ஆரம்பித்துவிடும்.
அதன்படி நடப்பு மாதத்தில் இதுவரை 4 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்-மூட்டுவலி ஆகியவை டெங்குவின் முக்கிய அறிகுறிகள். எனவே மேற்கண்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.