தமிழ்நாடு
ஜிகே வாசன்

தி.மு.க தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது- ஜி.கே.வாசன்

Published On 2021-12-06 10:08 GMT   |   Update On 2021-12-06 10:08 GMT
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஆத்தூர்:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் பிரச்சனைகளுக்காக கண்ணியமாக நடைபெற வேண்டிய பாராளுமன்றம் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தோடு நடைபெறுகிறது. இடையூறுகள் எதுவும் இல்லாமல் நடைபெற கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். கொரோனா ஓரளவு முடிந்த பிறகு பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது.

அது சம்பந்தமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை செய்யக்கூடாது. அது தொடர வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்ற முடியுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவேண்டும். சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். அதுவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையாகும். கோரிக்கையை ஏற்று அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளது. அந்த ரெயில்வே திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் த.மா.கா. தொடரும். ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து ஆத்தூரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர்கள் சுசீந்திர குமார், வக்கீல் செல்வம், காளிமுத்து உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News