தமிழ்நாடு
சாலையில் அமர்ந்து அரசு பஸ்சை வழிமறித்த பெண்

நெல்லையில் மழை பெய்த போது சாலையில் அமர்ந்து அரசு பஸ்சை வழிமறித்த பெண்

Published On 2021-12-06 08:20 GMT   |   Update On 2021-12-06 08:20 GMT
நெல்லையில் பஸ்சின் முன்பு தள்ளாடியபடி பெண் அமர்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட தயாரானது. அப்போது அந்த பஸ்சின் முன்பு சாலையில் தேங்கிய தண்ணீரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்தவாறு தள்ளாடிக் கொண்டிருந்தார்.

பஸ் டிரைவர் பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் அந்த பெண் அங்கிருந்து நகரவில்லை. தொடர்ந்து பஸ்சின் முன்பு அமர்ந்தவாறு இருந்தார். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர். எனினும் அவர் தள்ளாடியபடி இருந்தார். உடனடியாக அவரை அங்கிருந்து மீட்டு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் அவ்வாறு நடந்து கொண்டாரா? இல்லையென்றால் போதை பொருட்களை உட்கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News