தமிழ்நாடு
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கார் தீ பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்

கோவையில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2021-12-06 08:07 GMT   |   Update On 2021-12-06 08:07 GMT
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென கார் தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை:

கோவை நியூசித்தாபுதூர் திருமலைசாமி வீதியை சேர்ந்தவர் நஞ்சப்பன்(வயது70). இவர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

இவர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திற்கு சொந்த வேலை காரணமாக காரில் வந்தார். பின்னர் காரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நிறுத்தி விட்டு வெளியில் இறங்கி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றார்.

அந்த சமயம் வெளியில் நிறுத்தியிருந்த அவரது காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்தது. சிறி நேரத்தில் கரும்புகை தீயாக மாறியது. தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த அங்கு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த தீயணைப்பானை எடுத்து வந்து அணைத்து பார்த்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வர காலதாமதமானது.

சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் கார் முழுவதும் முற்றிலும் எரிந்து சேதமாகி விட்டது. காரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென கார் தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News