தமிழ்நாடு
கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே மழைநீரில் சிக்கிய ஆட்டோவை தள்ளி சென்ற நபர்கள்.

கோவையில் கனமழை- சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்

Published On 2021-12-06 04:12 GMT   |   Update On 2021-12-06 04:12 GMT
கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்தாலும், அவ்வப்போது ஒரு சில மணி நேரங்களில் கனமழையும் பெய்கிறது. நேற்றுமுன்தினம் பிற்பகலில் தொடங்கி மாலை வரை கொட்டிய மழையால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

நேற்று மாலையிலும் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், அவினாசி சாலை, ரெயில் நிலையம், கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழை காரணமாக அவினாசி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் நீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.

நேற்று முன்தினத்தை போல நேற்றும் லங்கா கார்னர் பாலம், அவினாசி ரோட்டில் உள்ள ரெயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக டவுன்ஹால், உக்கடம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், பிரதான வழியான லங்கா கார்னர் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அனைத்து வாகனங்களும் அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஸ்தம்பித்தன.

கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் ஆற்றில் உள்ள தடுப்பணைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன.

தொடர்ந்து மழை காரணமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து 44½ அடியாக நீடித்து வருகிறது. பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கோவை குற்றலா அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதேபோல் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Tags:    

Similar News