தமிழ்நாடு
காங்கிரஸ்

ராகுல் பேரணியில் கலந்து கொள்ள தமிழக காங்கிரசார் 1000 பேர் ஜெய்ப்பூர் செல்கிறார்கள்

Published On 2021-12-06 03:51 GMT   |   Update On 2021-12-06 03:51 GMT
சென்னையில் இருந்து 500 பேர் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 500 பேர் என்று மொத்தம் 1000 பேருக்கு குறையாமல் ராகுல் பேரணியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:

விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து அகில இந்திய காங்கிரஸ் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். பேரணியை வெற்றிகரமாக நடத்த நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை திரட்டுகிறார்கள்.

தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறைந்தபட்சம் தலா 25 பேர் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி ஜெய்ப்பூர் செல்வதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள். பல ரெயில்களில் இருக்கைகள் நிரம்பி விட்டன.

தற்போது ஜெய்ப்பூரில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. ஒமைக்ரான் பீதியும் இருக்கிறது. எனவே பலர் செல்வதற்கு தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

எப்படியும் சென்னையில் இருந்து 500 பேர் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 500 பேர் என்று மொத்தம் 1000 பேருக்கு குறையாமல் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பேரணியில் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களும் தவறாமல் கலந்து கொள்ளும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற 9-ந்தேதி முதல் தமிழகத்தில் இருந்து காங்கிரசார் ஜெய்ப்பூர் புறப்படுகிறார்கள்.
Tags:    

Similar News