தமிழ்நாடு
சபாநாயகர் அப்பாவு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்

மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு- சபாநாயகர் திறந்து வைத்தார்

Published On 2021-12-04 09:40 GMT   |   Update On 2021-12-04 09:40 GMT
மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பால் சுமார் 11, 134 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறும்.
கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக அதிகளவு மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பிரதான அணைகள் நிரம்பிவிட்டன. மணிமுத்தாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 115.50 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 697 கனஅடிநீர் வினாடிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 118 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.



அணையில் நீர் திறப்பால் சுமார் 11, 134 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறும். மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளை வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

அணையின் நீர் இருப்பு மற்றும் தண்ணீர் வரத்தை பொறுத்து இந்த ஆண்டுக்கான முன்னுரிமை பகுதியான 1,2-வது ரீச்சுகளின் வழியாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று காலை தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News