செய்திகள்
ராமதாஸ்

காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-11-30 10:14 GMT   |   Update On 2021-11-30 10:14 GMT
வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம், வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் ஆணையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடும், விலை உயர்வும் இரு வேதனையான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளன.

காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தான் வேதனையளிக்கும் அந்த உண்மைகள்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. அதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனையானது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலை கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்தன.

ஆனால், காய்கறிகளை விளைவிக்கும் உழவர்களுக்கு இந்த விலை உயர்வால் எந்த பயனும் இல்லை. மாறாக பாதிப்புகள் தான் அதிகமாகின்றன. ஒரு கிலோ தக்காளி வெளிச்சந்தையில் ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டபோதிலும் கூட உழவர்களுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே கிடைத்தது.

பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட விலை இடைத்தரகர்களுக்குத் தான் செல்கிறது. உழவர்களுக்குச் செல்லவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் அனைத்து வகையான வேளாண் விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; அவற்றுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்;

அதற்காக வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம், வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் ஆணையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காலத்தில் தோட்டக்கலைத்துறை உழவர்களிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்தது. அந்த அனுபவத்தின் உதவியுடன் தோட்டக்கலைத் துறையால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News