செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்வு

Published On 2021-11-28 08:13 GMT   |   Update On 2021-11-28 08:13 GMT
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 138.95 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,228.95 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 25-ந்தேதி நாள் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தரைப்பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. மாநகர பகுதியிலும் ஏராளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை நின்றாலும் பல்வேறு இடங்களில் வெள்ளம் வடியவில்லை.

அதனை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதியில் குறிப்பாக டவுன் காட்சி மண்டபம் முதல் மவுண்ட் ரோடு, ஆர்ச் வரை அதிகளவு தண்ணீர் தேங்கி இருந்தது. இன்று அவை முழுவதுமாக வடிந்தது.

இதற்கிடையே அணை பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 11.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 138.95 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,228.95 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2,553.37 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக இன்று 3-வது நாளாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இன்று காலை நிலவரப்படி மருதூர் கால்வாயில் இருந்து 13,070 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 102.20 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 103.50 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பாளை, கன்னடியன் கால்வாய், சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. கடனா அணையில் 8 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

குண்டாறு அணை பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது. அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை ஆய்க்குடி, தென்காசி பகுதியில் லேசான மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 82.7 அடி நீர் இருப்பு உள்ளது. ராமநதியில் 82 அடியும், கருப்பாநதியில் 68.24 அடியும் நீர் இருப்பு உள்ளது. குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.
Tags:    

Similar News