செய்திகள்
கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதான நுழைவுவாயில்

கொடநாடு வழக்கு விசாரணை நடக்கும் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2021-11-26 06:44 GMT   |   Update On 2021-11-26 06:44 GMT
நள்ளிரவு நேரத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதான பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவல் காரணமாக கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:

கோவை அவினாசி சாலையில் போலீஸ் பயிற்சி மைதானம் உள்ளது. இங்கு போலீஸ் பயிற்சி பள்ளி, துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் இடம், ஆயுதப்படை பிரிவு, மாவட்ட ஆயுதப்படை பிரிவு, ஆயுத கிடங்கு, குதிரைப்படை, போலீஸ் வாகனங்கள் என போலீஸ் துறை சம்பந்தப்பட்ட முக்கிய பலவும் இங்கு உள்ளன. இதுதவிர இங்குள்ள போலீஸ் குடியிருப்பில் ஏராளமான போலீசார் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

மேலும் மிக முக்கிய வழக்குகள் சம்பந்தமாக முக்கிய நபர்களை போலீசார் இங்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவது வழக்கம். அது போன்று நேற்று கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலீசார் காலை முதல் மாலை வரை விசாரணை நடத்தினர். மாலையில் விசாரணை முடிந்ததும் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.

அதில் பேசிய நபர், கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்னும் சில நொடிகளில் வெடித்து விடும் என கூறிவிட்டு தனது இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் போலீஸ் பயிற்சி மைதானத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது.

போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகளுடன் போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானம், ஆயுதப்படை பிரிவு, ஆயுத கிடங்கு, போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை வைத்து அது எங்கிருந்து வந்தது என ஆராய தொடங்கினர். இதில் அந்த போன் நம்பர் புலியகுளம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புலியகுளத்தை சேர்ந்த மோகன்காந்தி(46) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று அதிகாலை புலியகுளத்தில் உள்ள மோகன்காந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர் விசாரணையில், அவர் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு இருப்பதாக கூறியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நள்ளிரவு நேரத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதான பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவல் காரணமாக கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

Similar News