செய்திகள்
மெரினா கடற்கரை

குளம்போல் தேங்கிய மழைநீரால் துர்நாற்றம் வீசும் மெரினா கடற்கரை

Published On 2021-11-25 09:23 GMT   |   Update On 2021-11-25 09:23 GMT
கன மழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டி கடைகள் , மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் குளம் போல் தேங்கி வடியாமல் நிற்கும் மழை தண்ணீரால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஆ‌சியா‌விலேயே ‌மிக ‌நீ‌ண்ட கட‌ற்கரை என பெயர் பெற்றது சென்னை மெ‌ரினா கட‌ற்கரை‌ ஆகும். இக்கடற்கரையின் இய‌ற்கை அழகை மெருகூ‌ட்ட செய்ய மாநகராட்சி சார்பில் கண்ணைக் கவரும் வகையில் புல்வெளியில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.கிலோ மீட்டர் நீளத்திற்கு அங்குள்ள புல்வெளிகளை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்து அழகுபடுத்தினார்கள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் மெரினா கடற்கரை மணற் பரப்பில் குளம் போல் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது வெயில் அடிக்கத் தொடங்கினாலும் அங்குள்ள கடற்கரை மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது மேலும் அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசிபிடித்து துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு முகம் சுளிக்கிறார்கள். கன மழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டி கடைகள் , மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன. மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசி அலங்கோலமாக உள்ள மெரினாவை பார்த்து கவலையடைந்துள்ளனர். கடற்கரை அழகை பாதிக்கச் செய்யும் இந்த மழைநீரை உடனடியாக அகற்றி மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள்,மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News