செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுமா?- கேரளாவுக்கு கூடுதல் உபரி நீர் திறப்பு

Published On 2021-11-21 06:11 GMT   |   Update On 2021-11-21 06:11 GMT
கேரளாவுக்கு கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை இந்த ஆண்டு 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றது. கேரளாவுக்கு கூடுதலாக உபரிநீரை திறந்து வீணாக்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று 158 கன அடி நீர் மட்டுமே கேரள பகுதிக்கு உபரியாக திறக்கப்பட்டது. இன்று காலை நீர் திறப்பு 649 கன அடியாக உயர்த்தப்பட்டது. மின்சார பயன்பாட்டுக்கு போக வீணாக கடலில் தண்ணீர் கலந்து வருவதால் தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாக இருந்தபோதும் கேரள அரசின் பிடிவாதத்தால் 136 அடி வரை மட்டுமே நீர் தேக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

தற்போது மழை கைகொடுத்த நிலையில் கேரள அரசின் பிடிவாதத்தால் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அணைக்கு 3104 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு மின்சார தேவைக்காக 1800 கன அடி, இரைச்சல் பாலம் வழியாக 450 கன அடி என மொத்தம் 2250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 141.10 அடியில் உள்ளது.



வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு 2700 கனஅடி நீர் வருகிறது. 2355 கன அடி நீர் திறக்கப்படுவதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மஞ்சளாறு அணை 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 146 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.51 அடியாக உள்ளது. முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் 129 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு 2, தேக்கடி 06. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.


Tags:    

Similar News