செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு

Published On 2021-10-28 03:42 GMT   |   Update On 2021-10-28 03:42 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 37 ஆயிரத்து 162 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரத்து 982 கன அடியாக சரிந்தது.

மேட்டூர், அக்.28-

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் 33 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடை பாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஏற்கனவே குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 37 ஆயிரத்து 162 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரத்து 982 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீரும், கால்வாயில் 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 105.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து 107.180 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளளது.

Tags:    

Similar News