செய்திகள்
தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடும் வீரர்கள்

மர பட்டறையில் திடீர் தீ விபத்து- பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2021-10-21 06:28 GMT   |   Update On 2021-10-21 06:28 GMT
மர பட்டறையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34).

இவர் பாளை மார்க்கெட் மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே ஒரு மரக்கடையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். அங்கு அவர் மரத்தினாலான கதவு, ஜன்னல்கள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். நேற்று இவரும், கடையில் வேலை பார்த்த தொழிலாளர்களும் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இன்று காலை 7 மணி அளவில் இவரது கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன. ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

இதைத்தொடர்ந்து மேலும் கூடுதலாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் அங்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடையில் ஏராளமான மரபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுமார் 3 மணிநேரம் போராடி முற்றிலும் தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி அதிகாரி சுரேஷ் ஆனந்த் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள மரம் அறுக்கும் மற்றும் பாலிஷ் செய்யும் எந்திரங்கள், ஏராளமான தேக்கு மரக்கட்டைகள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து கடையை நடத்தி வந்த மணி பாளை போலீசில் புகார் செய்தார். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News