செய்திகள்
மாரியம்மாள்-ஜானகிராமன்

பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகராறு- வயதான தம்பதி எரிந்த நிலையில் கழிவறையில் பிணமாக மீட்பு

Published On 2021-10-19 09:19 GMT   |   Update On 2021-10-19 09:19 GMT
அம்பத்தூரில் வயதான தம்பதி எரிந்த நிலையில் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 89). இவரது மனைவி மாரியம்மாள் (79). இவர்களது மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

வயதான தம்பதிகள் ஜானகிராமனும், மாரியம்மாளும் தனியாக தங்கி இருந்தனர். இந்தநிலையில் இன்று காலை பக்கத்து வீட்டில் வசித்து வரும் சசிகலா என்பவரது வீட்டின் கழிவறையில் ஜானகிராமனும், மாரியம்மாளும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அம்பத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமி‌ஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இறந்து போன இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சசிகலா என்பவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நடந்து இருப்பதாக தெரிகிறது.

நேற்று மாலை வீட்டில் இருந்து கழிவுநீர் செல்வது தொடர்பாக மாரியம்மாளுக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வயதான தம்பதி ஜானகிராமனும், மாரியம்மாளும் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இன்று காலை அவர்கள் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள சசிகலா பயன்படுத்தும் கழிவறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

எனவே அவர்கள் மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஜானகிராமன் வீட்டில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் கழிவுநீர் செல்வது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சசிகலா பிரச்சனை செய்து வருகிறார். இதனால் மனவேதனை அடைந்துள்ளோம். எங்களது சாவுக்கு காரணம் சசிகலா என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்து போன மாரியம்மாளுக்கு சசிகலா நெருங்கிய உறவினர் ஆவார். வயதான தம்பதி சாவு குறித்து சசிகலாவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News