செய்திகள்
கூட்டத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் பேசியபோது எடுத்தப்படம்.

கோவை மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவு- ஆணைய உறுப்பினர் தகவல்

Published On 2021-10-19 04:05 GMT   |   Update On 2021-10-19 04:05 GMT
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது.
கோவை:

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் பேசியதாவது:-

சமூக நலத்துறை சார்பில் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட 6 வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்த அரசாணை கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. கோவை மாநகரில் கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து 188 புகார்கள் பதிவாகி உள்ளன. இதில் போக்சோ சட்டத்தின் கீழ் 133 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டப்படி 47 வழக்குகளும், மற்ற சட்டங்களின் கீழ் 8 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

இதன் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாக்கப்படுவதால், குற்றச்சம்பவங்கள் குறையும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடுத்த 3 மாதங்களுக்குள் குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், 5 ஆயிரம் பேருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் மல்லிகை செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூடுதல் எஸ்.பி. சுபாஷினி, துணை கமி‌ஷனர் சிலம்பரசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News